சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

“மண முறிவு”. ஊராலே லண்டனுக்கு மணமகளாய் வந்து
உலகறிய அக்கினி முன் திருமணமும் கண்டு
ஆறாண்டில் ஆண்பெண்ணாய் இரு பிள்ளை ஈன்று
அழகு வீடு கடை இரண்டு தமதாக்கி கொண்டு
பேராக வாழ்ந்தவள் பின் மணமுறிவு என்று
பிரிந்திட்டாள் கணவனினை பத்தாண்டின் பின்பு
வீறாப்பாய் தனித்தாயாய் ஐந்தாண்டு வாழ்ந்த
விமலா என் முன் வந்து அழுகையுடன் சொன்னாள்.

அண்ணன் அக்கா சொந்தம் எந்த ஆதரவும் இல்லை
அவரவர்க்கு குடும்பமென ஆயிரமாய் தொல்லை
எண்ணி சில நண்பியுடன் பழகுகிற போதும்
எள்ளிநகை ஆடுகிறார் முதுகின் பின் தாமும்
எண்ணத்தில் தீயவராய் அவர் கணவன் மாரும்
என் வேலை தலத்திலும் பல காமக்கண் மேயும்
புண்ணாகி போகும் மனம் எவர் கோபத்தோடும்
புருஷனையே விட்டவளே என ஏசும் போதும்….

**வளர்ந்துவிட்ட பிள்ளைகட்கும் வாய்கூட நீளும்
வழிமாறும் செய்கையை நான் கண்டிக்கும் போதும்
உளத்தாலும் உடலாலும் தளர்ந்திட்டேன் நானும்
உண்மை இது சொல்ல மன
வீம்பு தடை போடும்
தளதளத்த குரலில் அவள் குமுறல் வெளிப்பாடு
தவறுணர்ந்த வனாக கணவன் நிலைப்பாடு
உளம் உடைந்து அவனும் தன் நிலை முன்பு சொன்னான்
ஒற்றுமையாய் இருவரையும் இணைத்து வைத்தேன் விரைவாய்”