சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்- நிகழ்வு 221 “காணி”

அவர் ஒரு அப்பாவி
ஆனாலும் அறிவாளி
எவருக்கும் உபகாரி
இலண்டனிலே நிலையாகி.

முதிச வழி சொத்து
மூலமாய் சீதனமாய்
அதிகளவு காணி
அமைந்த மனை மாடி

என்றெல்லாம் ஊரில்
இருப்பு அவர் பேரில்
தன்னுடைய மண்ணில்
தன் தமயன் பார்ப்பில்

ஊருக்கு போகும்
ஓய்வில் விடுமுறையில்
காதுக்குள் வந்து
கதை சொல்வார் ஒருவர்

வெளிநாட்டார் காணிக்கு
வில்லங்கம் வரக்கூடும்
புலிக்காரர் பறிப்பார்கள்
போர் தீரும் மட்டும் நீர்

அண்ணன் பராபரிப்பில்
அளித்துவிடும் அதை என்று
அண்ணன் ஏற்பாட்டில்
அளப்பார் கதை இவர்க்கு.

ஆசை எதும் இல்லாத
அண்ணன்தான் அவரும்
பேராசை மனையாளின்
பேச்சுக்கு அவர் அடக்கம்

எழுதிக் கொடுத்தார்
இடையே போர் ஓய
உறுதிக் கட்டோடு
ஊருக்கு புறப்பட்டார்.

பாரிச வாதத்தால்
படுக்கையொடு அண்ணர்
வா இரு என்று ஒரு
வார்த்தை அண்ணி சொல்லவில்லை.

காணி வயல் விற்று
காசாக்கி தான் தனக்கு
மாடி மனை கட்டி
வாழுகிறாள் அண்ணி அவள்.

நம்பி கொடுத்ததற்கு
நன்றி இது தான் என்று
வெம்பும் மனத்தோடு
விடுதியிலே தங்கி நின்றார்

உள்ளது ஒரு பையன்
ஊர் சொத்தில் உலை வைத்து
நல்ல படி வாழுகின்றார்
நயவஞ்சர் பாவம் இவர்.