சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்-சந்திப்பு 192

மாட்சிமை தங்கிய மகாராணி-நும்
ஆட்சியில் இருந்தது பல நாடு-போர்
பாய்ச்சல் திறனில் படை கொண்டு
பாட்டனார் ஆண்டார் பல ஆண்டு

இலங்கையும் உமது ஆட்சியிலே
இருந்தது வளமாய் நீட்சியிலே
மலைய தேயிலை,இறப்பர்,கறுவா
வளத்தினை வளர்த்தீர் மூச்சுடனே.

ஆள்பவன் மாற்றான் என்றானால்
அடிமை அந்நாடு மெய்தானே
வாள் பலம் கொண்ட தமிழ் மன்னர்
வலிமை நும் குண்டால் இரைதானே!

ஆட்சி முடித்து விடுதலை நீர்
அளித்து மீண்ட பொழுதுல் ஏன்
மாட்சிமை மிகுந்த தமிழ் மண்ணை
மன்னரை கொன்று பெற்றதனை

மீள தமிழர்க்கு அளிக்காமல்
மீளவும் தமிழர் அடிமைகளாய்
ஆளும் சிங்கள அரசிடமே
அளித்தது தான் ஜன நாயகமா?

கோபம் அதிகம் இதயத்தில்
கொண்டோம் என்பது நிஜமெனிலும்
போரில் போது அகதிகளாய்
பொறுப்பேற் எமக்கு வாழ்வழித்தீர்

நீல கண்ணும் பொன்நிறமும்
நீங்கா உதட்டு புன்நகையும்
கோல எழிலின் பேரழகும்
கொண்டு கோலை ஒச்சியதும்

பாட்ட. னிடம் தோற்ற நாடு
பாரெங்கும் நூற்றி ஐம்பத்தி ஆறு
கேட்ட சுதந்திரத்தை கொடுத்து
கீர்த்தியை பெற்றதும் நினக்கு சிறப்பு

லட்சோப லட்சம் பேர் திரண்டு
நல் அடக்கத்திலே காட்டிய அன்பு
கிட்டிய பாக்கியம் நுமக்கு
கிட்டும் இனி இந்த உலகில் எவர்க்கு