சந்தம் சிந்தும் கவிதை

-எண்ணம் 191-எல்லாளன்-

எண்ணம். இறவாத கவலை ஒன்று எனக்கும்
எண்ண மனம் எப்போதும் கனக்கும்
மறக்கத்தான் முயன்றாலும் விட்டும்
மறுபடியும் நினைவு வந்து கொட்டும்.

ஜெசீஈ கல்வித் திட்ட முறைமை
ஜீசீஈக்கு வகுப்பேறும் நிலைமை
பாசான நிலைக்கேற்ப தலைமை
படிக்கும்துறை தெரிகின்ற வழமை.

விஞ்ஞான துறைக்குப் போ என்று
விட்டார்கள் எனை தெரிந்து அன்று
நெஞ்சுக்குள் கலை பயில ஆசை
நிராகரித்தார் வீட்டார் பே ராசை..

கலை பயில மதிப்பில்லா காலம்
கற்போர் மேல் கேலி கணை பாயும்
மலையாக கவலை நெஞ்சில் மோத
மனம் ஒவ்வா துறை கற்றேன் தேற.

எண்ணம் எலாம் கலை பட்டம் மீதில்
எட்டவில்லை உயர் சித்தி தேர்வில்
வண்ண எழில் எதிர் காலம் வீணில்
வர்த்தகத்தால் நிமிர்ந்தேன் பின் சீரில்

எண்ணத்தை மனமே தான் எழுப்பும்
இதயத்தில் நோக்கத்தை பதிக்கும்
திண்ணத்தை செயலாக செலுத்தும்
திறமை அது வெற்றிக் கனி பறிக்கும்.

மனம் இல்லா வழி செல்ல வேண்டாம்
மறுபடியும் வராது சென்ற ஆண்டாம்
எவர்க்காயும் வழி மாற வேண்டாம்
எம் வாழ்வு எம் கையில் ஆமாம்!
-எல்லாளன்-