சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-263 ஆவது.
அழகு!
…………..
மானமும் வீரமும்
மறவர்க் கழகு!
வானமும் நிலவும்
வையத்திற்கழகு!
அன்பும் அறிவும்.
அன்னையர்க் கழகு!
மன்பதை மேம்பட
உழைப்பதே அழகு!
தேசியத் தலைவர்
படையணி அழகு
தேசத்தில் கொஞ்சும்
இயற்கை அழகு!
சிற்றப்பா சீமான்
பேச்சே அழகு
சீறும் புலியின்
பாய்ச்சல் அழகு!
கவிதன் திருக்குறள்
வீச்சே அழகு!
கற்றதை உரைத்தல்
ஆசிரியர்க் கழகு!
கல்வியும் கேள்வியும்
மாணவர்க் கழகு!
கற்க கசடற
கற்பவை அழகு!
தனித்துத் துணிவுடன்
வாழ்வதே அழகு!
தன்னைத் தானே
செதுக்கல் அழகு!
நினைத்ததை முடிக்கும்
நீயே அழகு!
நேரம் போற்றல்
மாந்தர்க் கழகு!
வல்வைத் துறைக்கடல்
அலையே அழகு
வாளும் வேலும்
ஏந்தல் அழகு!
சொல்லில் செந்தமிழ்ச்
சொல்லே அழகு
சுடர்விடும் எழுகதிர்
விடியல் அழகு!
மட்டுநகர் வயல்வெளி
மீன்கள் அழகு!
மாபலா வாழையைச்
சுவைப்பதே அழகு!
சிட்டுக் குருவிகள்
சிறகசைப் பழகு!
செம்போத்துப் பறவை
பறப்பதே அழகு!
மான்மயில் கூட்டம்
மயக்கும் அழகு
மண்ணில் பசுமைத்
தோற்றம் அழகு!
வான்முகில் தீட்டும்
ஓவியம் அழகு!
வண்ணத்தில் எண்ணம்
பதிப்பது அழகு!
அங்கயற் கண்ணி
அருஞ்செயல் அழகு!
அயலவன் படகை
உடைத்ததே அழகு!
எங்களின் ஈழம்
என்றுமே அழகு
எம்மா வீரரின்
ஈகமே அழகு!
அபிராமி கவிதாசன்
30.04.2024