வியாழன் கவிதை

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

கவி 724

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே

உறவுகளுள் இவரே உன்னத உறவாம்
வரமாக கிடைத்திட்ட உயரிய வரமாம்
அள்ளி அள்ளி கொடுப்பாரே பாசத்தை
எள்ளளவும் குறைத்திடார் சொரியும் நேசத்தை

ஆயிரம்பேர் வாழ்க்கையில் வருவார்கள் போவார்கள்
ஆயினும் இவரைப்போல் யார்தான் ஆவார்கள்
பெத்தவள் பேறுபெற்றவள் அந்த படைத்தவரால்
இத்தரையோ வணங்கிடும் இவளை படைத்தவளாய்

உதைத்தே உருண்டு புரளுவான் சேய்
அதையும் உவகையுடன் ஏற்றுக்கொள்ளுவாள் தாய்
சுமையினை விரும்பியே தாங்கிடும் சுமைதாங்கி
உமையொறுத்து வாழ்ந்தாயே வலிகளைத்தான் வாங்கி

அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லையே
உன்னத செயல்களும் பிறந்திடும் எல்லையே
இறைவனோ தெரியாது இதுவரைக்கும் அரூபியாய்
இறைவியாய் அன்னை தரிசிக்கும் சொரூபியாய்

சுவர்க்கத்தின் வாழ்க்கை மண்ணுலகில் நகரும்
இவரில்லா வாழ்க்கை பூமியில் நரகம்
வாழ்த்திவிட தாயவளை நாளொன்று போதாது
வாழ்ந்துகொண்ட அதிசயமே உன்னருளின்றி வாழ்வேது

ஜெயம்
08-05-2024