வியாழன் கவிதை

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே…

வியாழன் கவி -1975

அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே❤️…!!

அகரமின்றி அழகேது நம்
தாய்மொழிக்கு
அன்னையின்றி வாழ்வேது
மனிதர் நமக்கு
தாயின்றித் தான் உயிரேதும்
தங்குமா பூமியில்
தளராத நம்பிக்கஒ ஒளியே
தாய் அன்றோ…!

கருவறை குடிகொள்ளும்
தாய்மை இடத்தே
உருவாக்கும் இறைவடிவே
உனைப் பணிவோம்
உயிரோட்ட அன்பு எங்கே
அறிவாயா- மனிதா
உணர்வோடு மதிப்பாக்கு
அன்னை மடியை…!

சுற்றி வந்து சுமையின்றி
சுகம் தரும் தாய்
சுமையென்று நீ விலக்க
நியாயமுண்டோ?
முதுமைக்குள் மூழ்கும்
அவள் காலம் அறிந்து
முத்தாய் நீ சுமக்கவும்
வேண்டாமோ சொல்..!

எத்தனை உறவுகள்
உன்னோடு கடந்தாலும்
உனக்குள் உணர்வாகும்
அன்னையெனும் பாசம்
வேசங்கள் இடாது என்றும்
வேதனை தராது நிற்கும்
வெண் சங்கு தோற்கும்
அன்னை அவளுக்கு
ஈடு இணை ஏது இவ்வுலகிலே..!
சிவதர்சனி இராகவன்
8/5/2024